“எங்கள் மீது அத்துமீறி இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது!” இந்தியா மீது குற்றச்சாட்டும் சீன ராணுவம்!
![](https://thambattam.com/storage/2020/09/54769581_303.jpg)
சட்டவிரோதமாக இந்திய ராணுவம், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளான பாங்கோங் ஏரி மற்றும் ஷென்போ மலைப்பகுதிகளில் சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளது!
இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதில் ஏற்பட்ட மோதல் முதல் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
![](https://thambattam.com/storage/2020/09/India-China-border-disputes-1000x600-1-300x180.jpg)
இதனால் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் படைகளை குவித்து வருகின்றன. மேலும் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் எவ்வித உறுதியான முடிவும் எடுக்கவில்லை, பதற்றமும் தணிந்தபாடில்லை என கூறப்பட்டு வருகிறது. அவ்வப்போது மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி உள்ளிட்டோர் லடாக் எல்லையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://thambattam.com/storage/2020/09/6868855184638870020-e1599542817438-300x164.jpg)
இந்த நிலையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சீன ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சட்டவிரோதமாக இந்திய ராணுவம், பாங்கோங் ஏரி மற்றும் ஷென்போ மலைப்பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.
ஆனால் இந்திய ராணுவ தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் எல்லையில் பதற்றம் நீடிப்பதால் அங்கு தொடர்ந்து வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.