“கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” விஜயகாந்த் கோரிக்கை!

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 3 ஆண்டு தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வேளாண் துறை மூலம் இந்த நிதி செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இணைய நிலத்துக்கான கணினி பட்டா அல்லது சிட்டா வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பல ஆயிரம் பேர் போலி ஆவணங்கள் மூலம் நிதி உதவி பெற்று மோசடி செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் பேர் போலி கணக்குகள் இருந்தது தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட வங்கிகள் கணக்குகளும் சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 700 பேர் மோசடியாக இணைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 600 பேர் பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீலகிரியில் பிரதமர் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாத 44 பேர் பயன்பெற்று வருவது தெரிய வந்ததை அடுத்து அந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

நமது விவசாயிகள் நாள்தோறும் பல்வேறு வருகின்றனர் மழை வெள்ளம், சுனாமி இன்னல்களை சந்தித்து போன்ற பேரிடர்களால் மட்டுமல்லாமல், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் அவர்கள் அவதியடைந்து வருகின்றனர். தற்போது கொரோனா காலத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாததால் விளை பொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் வழங்கும் வகையில் அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த திட்டத்திலும் இடையில் உள்ளவர்களின் மோசடி காரணமாக விவசாயிகளுக்கு உரிய பணம் கிடைக்கப் பெறுவதில்லை. அரசால் வழங்கப்படும் பேரிடர் கால நிவாரண நிதியும் முறையாக அவர்கள் சென்றடைவதில்லை.

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகளுக்கு இரண்டு பக்கமும் சோதனையாக உள்ளது. ஏற்கனவே, பல்வேறு பிரச்சனைகளால் எத்தனையோ ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வங்கிகளில் பெற்ற கடன்களை செலுத்த முடியாமலும், டிராக்டர்களுக்கான பணத்தை செலுத்த முடியாததால் அந்த டிராக்டர்களை பறிமுதல் செய்வதால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாகவும் அவர்கள் தற்கொலை என்ற வேதனையான முடிவுக்கு தள்ளப்படுகின்றனர்.

நமது நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே நமது நாடு காக்கப்படும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குழு ஒன்றை அமைத்து பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அந்த நபர்களிடம் இருந்து ரூபாயை பறிமுதல் செய்து உரிய விவசாயிகளுக்கு கிடைத்திட ஆவண செய்வதுடன், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x