“கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானால், அது நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்!” – டிரம்ப்!
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸை மக்கள் விரும்பவில்லை, அவர் வெற்றி பெற்றால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றிபெறும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற சாதனையை படைப்பார்.
இந்நிலையில் வட கரோலினாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸை மக்கள் யாரும் விரும்பவில்லை. அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இருக்க முடியாது. அவர் அதிபரானால் அது நம் நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும். கமலா ஹாரிஸின் செல்வாக்கு குறைந்துகொண்டே வருகிறது. அமெரிக்கர்களால் அவரை ஏற்றுகொள்ள முடியாது” என்று கூறினார்.
மேலும் “சீனாவுடன் மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஆனால் அந்த மை காயும் முன்னரே, கொரோனா என்னும் தொற்று வந்துவிட்டது. அதனால் அந்த வர்த்தக ஒப்பந்தத்தை முன்பு போல் இல்லாமல் வேறு மாதிரி பார்க்கிறேன். ஜோ பிடன் வெற்றி பெற்றால், சீனாவும் வெற்றி பெறும். உலக வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நாடாக அமெரிக்காவை மேம்படுத்தியுள்ளோம். ஆனால் சீனாவில் இருந்து பரவிய கொரோனாவால் பொருளாதாரம் முடங்கியது. தற்போது அதனை மீண்டும் திறந்துவிட்டு, பழைய நிலைக்கு திரும்பி வருகிறோம். ஜோ பிடன் பதவியேற்றால் அமெரிக்கா வீழ்ச்சியடையும்” என்றும் கூறியுள்ளார்