தாடி வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இஸ்லாமிய காவல்துறை உதவி ஆய்வாளர்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாடி வைத்ததற்காக ஒரு இஸ்லாமியக் காவல்துறை துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் இந்சார் அலி என்னும் துணை ஆய்வாளர் பணி புரிந்து வருகிறார். இவர் நீண்ட தாடியுடன் பணி புரிந்து வந்தார். இதனை கவனித்த பாக்பத் மாவட்டத்தின் காவல்துறை தலைமை அதிகாரி அபிஷேக் சிங் இவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

இது குறித்து அபிஷேக் சிங், “காவல்துறை அனுமதி இன்றி தாடி வைத்திருந்ததால் நேற்று முதல் அலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல முறை அவருக்கு இது குறித்து அறிவுறுத்தியும் அவர் விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளார். அவருக்கு இது குறித்து ஏற்கனவே நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆயினும் அவர் அதைக் கண்டு கொள்ளவில்ல” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்சார் அலி கூறுகையில், “நான் 1994 ல் கான்ஸ்டபிளாக பணியில் சேரும் போதே லேசான தாடியுடன் இருந்தேன். தற்போது நீளமான தாடியுடன் இருக்கிறேன். சென்ற வருடம் நான் விடுமுறை கேட்டபோது சூப்பிரண்ட் பிரதாப் கோபேந்திர யாதவ் எனது தாடியைக் குறித்துக் கேட்டார். நான் ஏற்கெனவே பணி புரிந்த எந்த இடத்திலும் இது போலப் பிரச்சினை இருந்தது இல்லை. நான் ஏற்கனவே பலமுறை அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளேன். ஆனால் பதிலில்லை” எனக் கூறி உள்ளார்.