NG-14 Cygnus விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயர்ச்சூட்டி பெருமை செய்த அமெரிக்கா!
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் விண்கலத்துக்கு மறைந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையகாது. 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.
2003-ம் ஆண்டு விண்வெளியில் பறக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107)-ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு விண்ணில் பாய்ந்தது. பிப்ரவரி 1-ம் தேதி, 16 நாட்கள் பயணம் முடித்து தரையிறங்குவதற்கு சுமார் 15 நிமிடங்கள் இருந்தபோது, டெக்சாஸ் வான்பரப்பில் விண்கலம் வெடித்துச் சிதறியது. கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனமான “Northrop Grumman” தன்னுடைய அடுத்த விண்கலத்துக்கு எஸ்எஸ் கல்பனா சாவ்லா என்று பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவழியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காக கல்பனா சால்வா பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறுகையில், “விண்வெளி வீரராக சாதனை படைத்த கல்பனா சாவ்லாவை நாங்கள் மதிக்கிறோம். விண்வெளி பயணத்தில் அவரது பங்களிப்பு தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தியாகம் மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. எங்களது NG-14 Cygnus விண்கலத்துக்கு அவரது பெயரை சூட்டுவதில் பெருமிதம் அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா விண்கலம், இந்த மாத இறுதியில் நாசாவின் மிட் அட்லாண்டிக் ஸ்பேஸ் போர்ட்டிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது குறிப்பிடத்தக்கது .