நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத மத்திய அரசு-புதுச்சேரி முதல்வர்!!!

நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை மத்திய அரசு உணர்ந்துகொள்ளவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செப். 10) புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“அகில இந்திய அளவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 76 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் 72 சதவீதமாக உள்ளது. எனவே, நோயாளிகளுக்குச் சிறப்பான மருத்துவம் கொடுக்க வேண்டும். இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.
தற்போது பரிசோதனையை அதிகரிக்கின்ற காரணத்தால் நிறைய ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள், ஆண்டிஜென் கருவிகள், ட்ரூநெட் (TrueNAT) சிப்புகள், முகக்கவசங்கள், கவச உடைகள், ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள் மற்றும் மருந்துகள் தேவைப்படுகின்றன.
இவற்றையெல்லாம் சுகாதாரத்துறை படிப்படியாக வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இதற்குத் தேவையான நிதியைக் கொடுப்பதற்குத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளேன்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை தூய்மையான நகரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால் ஆகியவை முன்னணியில் உள்ளன. இது மக்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் நடத்திருக்காது. நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது அரசின் குறிக்கோள். புதுச்சேரி தூய்மையாக இருப்பதால்தான் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இருப்பினும், புதுச்சேரியை இன்னும் தரம் உயர்ந்ததாக மாற்ற வேண்டும். புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். அதனைப் படிப்படியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், காலதாமதம் ஏற்படுகிறது. இதனைக் குறைந்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளேன்.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் செப். 21 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வந்து படிக்கலாம். அவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளைக் கழுவ வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை மத்திய அரசு கூறியிருக்கிறது. இது சம்பந்தமாக அமைச்சர் கமலக்கண்ணனுடன் கலந்து பேசி, இந்த விதிமுறைகளின் அடிப்படையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
வருகிற 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைப் பல மாநிலங்கள் எதிர்க்கின்றன. நீட் தேர்வே வேண்டாம் என்பது புதுச்சேரி அரசின் கொள்கை. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். எங்களது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஜனநாயக நாட்டில் இது மக்களின் உரிமையைப் பறிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. மத்திய அரசு தான் எடுத்த முடிவை மாற்றுவதாக இல்லை. இதனால் பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். நேற்று அரியலூரில் விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார். இப்படி தமிழகத்தில் பல பகுதிகளில் மாணவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லி தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை மத்திய அரசு உணர்ந்துகொள்ளவில்லை.
புதுச்சேரியில் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். அதனை நிராகரித்துவிட்டார். மாணவர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது. இதில் மத்திய அரசு எவ்வித கவுரவமும் பார்க்காமல் மாணவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நீட் தேர்வை ரத்து செய்து, 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் இன்னும் பல உயிர்களை இழக்கின்ற சூழ்நிலை உருவாகும். இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு மற்ற மாநிலங்கள் கேட்பது போல் நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும். புதுச்சேரி, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதன்மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்” .
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.