நீட் தேர்வின் மூலம் கொள்ளையடிக்கும் மத்திய அரசு! மூன்று ஆண்டுகளில் 400 கோடி வருமானம்!!!

நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு 400 கோடிகளுக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு இந்திய அளவில் ஒரே மருத்துவத் தேர்வு திட்டத்தை (நீட் தேர்வு) 2013இல் அறிமுகப்படுத்தியது. அப்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன. ஆகவே சில மாநிலங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 2016 வரை ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே நடத்தப்பட்ட இந்த தேர்வுகள் 2016 இல் இருந்து தமிழ் உட்பட 10 பிராந்திய மொழிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பாஜகவை தவிர்த்த தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓர் அணியின் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தன. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். மேலும் இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த நீட் தேர்வுக்கு தமிழத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு 400 கோடிகளுக்கும் மேல் வருவாய் ஈட்டி இருக்கும் தகவல் தெரியவந்துள்ளது. இதர தேர்வுகளை ஒப்பிடும் போது நீட் தேர்வுக்கான கட்டணம் மிக அதிகமாகும். நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் இந்த நீட் தேர்வுக்கு கட்டணமாக ஓசி மற்றும் ஓபிசி வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் 1,400 ரூபாயும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்கள் 750 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
நீட் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக 2017-ம் ஆண்டு 145 கோடி ரூபாயை வசூலித்த சிபிஎஸ்இ, 40 கோடி ரூபாயினை மட்டுமே செலவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த ஆண்டு 105 கோடி ரூபாயை தேர்வை நடத்திய சிபிஎஸ்இ வருமானமாக ஈட்டியுள்ளது.
அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு நீட் விண்ணப்பங்கள் மூலம் 168 கோடி ரூபாயினைச் சிபிஎஸ்இ வசூலித்துள்ளது. ஆனால் செலவு குறித்த விவரங்களை அவர்கள் கொடுக்கவில்லை.
மேலும் கடந்த 2019-ம் ஆண்டில் நீட் தேர்வு கட்டணங்கள் மூலம் 192 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதற்கான செலவுகளும் வெளியிடப்படவில்லை.
இதன் மூலம் நீட் தேர்வினால் சிபிஎஸ்இ க்கும், மத்திய அரசுக்கு மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் 400 கோடிக்கும் அதிகமான ரூபாய் வருமானமாக வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள். தனியார் மையங்களில் கட்டணமாக பல லட்சங்கள் வசூலிக்க படுகிறது. அதனால் பணம் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்கிற குற்றச்சாட்டு உள்ள நிலையில் மத்திய அரசும் நீட் தேர்வின் மூலம் லாபம் பார்த்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.