கொரோனா ‘நெகட்டிவ்’ வந்தால் தனிமை வேண்டாம்! திடீர் முடிவு

பரிசோதனை முடிவுகளில், கொரோனா தொற்று இல்லை என்றால், தனிமை வேண்டாம்; வழக்கம் போல அவர்களது பணியை செய்யலாம்’ என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 11ம் தேதி, ‘பரிசோதனை செய்தாலே தனிமைப்படுத்தப்படுவர்; முடிவில், ‘நெகட்டிவ்’ என்று வந்தாலும், தனிமை தொடரும்’ என்ற அறிவிப்பை, சென்னை மாநகராட்சி செய்திருந்தது.
இந்நிலையில், அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
‘சென்னை மாநகராட்சியில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யும் நபர்கள், முடிவு வரும் வரை, தங்களை வீட்டிலேயே கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டால், புதிய நடைமுறைப்படி, வழக்கம் போல, அவரவர் பணியை மேற்கொள்ளலாம்.
பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், பரிசோதனை செய்த நபரின் வீட்டில் உள்ளவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களுக்கான அனைத்து, ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். டாக்டர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனைகளிலோ, கொரோனா தடுப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ தனிமைப்படுத்தப்படுவர்.’
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.