வேலையில்லை, சம்பளமில்லை – ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்த பி.எப்., சந்தாதாரர்கள்!

ஊரடங்கினால் வேலையிழந்து நிதி நெருக்கடிக்கு ஆளான 30 லட்சம் பேர் உட்பட 80 லட்சம் பேர் பி.எப்., கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியை வெளியே எடுத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்புக்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. அப்போது பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கொரோனா சிறப்பு திட்டத்தின் கீழ் பி.எப்.,ல் இருந்து எளிதில் பணம் எடுக்கும் முறையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
தற்போது வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி கடந்த ஏப்ரல் தொடங்கி ஜூலை 3-ம் வரையிலான காலத்தில் 80 லட்சம் மக்கள் ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்துள்ளனர். இது வழக்கமாக எடுக்கும் பணத்தை விட பல மடங்கு அதிகம். இதனால் இந்த ஆண்டு வருவாய் இழப்பு ஏற்படும்.
80 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் கொரோனா காரணத்தால் பணம் எடுப்பதாக கூறி ரூ.8,000 கோடி எடுத்துள்ளனர். பாக்கி 50 லட்சம் பேர் பொதுவான காரணங்களுக்கு பணம் பெறுவதாக கூறி ரூ.22 ஆயிரம் கோடி எடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பதால் வரும் வாரங்களில் மேலும் ஒரு கோடி பேர் தங்கள் கணக்கை முடித்துக்கொள்வார்கள். இவ்வாறு அதன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.