நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியக்கோரி கடிதம் எழுதிய நீதிபதி!!

நீட் தேர்வுக் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா நீதிமன்றத்தை அவமதித்து பேசியுள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் நேற்று (செப்.13) நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு அச்சம் காரணமாக தேர்வுக்கு முந்தைய நாளில் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் எழுந்த பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், நீட் தேர்வு நடந்து முடிந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், “நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்” மேலும், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது,” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.