நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதிகள்!

ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா, நடிகர் சூர்யா நீட் பற்றி தவறான கருத்துக்களை பதிவிட்டிருக்க மாட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.
நீட் தற்கொலை விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவை சமூக வலைதங்களில் மிக வேகமாக பரவி, பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. “கொரோனா தொற்று காரணமாக உயிருக்கு பயந்து, நீதிமன்றமே வழக்குகளை வீடியோ கான்ஃபிரசின் மூலம் நடத்தி வரும் நிலையில், மாணவர்கள் தேர்வெழுத உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்” என நீதிமன்றம் தொடர்பான ஒரு கருத்தை தனது அறிக்கையில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நடிகர் சூர்யா மீது ‘நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை’ எடுக்கவேண்டுமென்று தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான், ஓய்வு பெற்ற நீதிபதிகளும் சூர்யாவின் கருத்து தொடர்பாக பல்வேறு செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா அவர்கள் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதாவது, “நடிகர் சூர்யா சிறந்த கல்வியாளராவார். தொண்டு நிறுவனங்களை வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவர் நீதிமன்றம் தொடர்பாக உள்நோக்கத்துடன் கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார். அதே நேரத்தில் எஸ்.எம். சுப்பிரமணியம், நீதிமன்றத்தின் மான்பையும், நீதிபதிகளின் மான்பையும் காக்கும் வகையில், அவர் புகாரளித்ததை புரிந்துகொள்ள முடிகிறது. இனுப்பினும் நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையுடன் தவிர்க்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஓய்வு பெற்ற நீதிபதி சுந்தரம் அவர்களும் “நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடாகவே சூர்யாவின் அறிக்கை உள்ளது” எனவும் நீதிபதி சுந்தரம் கூறியுள்ளார்.