பாம்பனில் அமைய இருக்கும் புதிய மேம்பாலம்!! மத்திய ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வைரல் வீடியோ!

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக். நீரிணைப்பு கடற்பகுதிகளில் தமிழகத்தோடு ராமேசுவரம் தீவை இணைக்கிறது. இந்த பாம்பன் பாலம் 2.3 கி.மீ. நீளம் கொண்டது. கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்களில் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன.
பாலத்தின் மத்தியில் பாக். ஜலசந்தி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு படகுகள் மற்றும் கப்பல்கள் செல்ல வசதியாக தூக்குப் பாலம் உள்ளது. பாம்பன் ரயில் பாலம் கட்டடப்பட்டு நூற்றாண்டை கடந்து விட்டதாலும், பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுவதாலும் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் அறிவித்தது.

தொடர்ந்து இந்திய ரயில்வே சார்பில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கன்னியாகுமரியில் 1.3.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் கானொலி மூலம் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 11.08.2019 அன்று பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காக பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின. செப்., 2021க்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,345 மீட்டர் தூரம் கொண்ட இந்தப் புதியப் பாலத்தில் 60 அடிக்கு ஒரு தூண் என்ற விகிதத்தில் 140 தூண்கள் அமைக்கப்படுகிறது. பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்திற்கு தூக்கு பாலம் அமைய உள்ளது. மேலும் இரட்டை வழித்தடத்துடன் மின்சார ரயில்களை இயக்கும் வகையிலும் இந்த புதிய ரயில்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாம்பனில் அமைய உள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தின் மாதிரி வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளார். 135 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் செல்வதும், மத்தியில் உள்ள தூக்குப் பாலம் லிப்ட் டெக்னாலஜியில் மூலம் இயங்குவது போலும் காட்டப்பட்டுள்ளது. கப்பல் வரும்போது பாலத்தின் மத்தியில் உள்ள தூக்குப்பாலம் லிப்ட் போல செயல்பட்டு மேலே தூக்கப்படும். பின்னர் கப்பல் சென்ற பிறகு மீண்டும் கீழிறக்கப்பட்டு ரயில் இயக்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.