வரும் ஜனவரி 27-ல் விடுதலையாகிறார் சசிகலா… அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறையில் உள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27-ல் விடுதலையாகலாம் என ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.தற்போது சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சிறைக்குச் சென்று சந்தித்து வருகின்றனர்.
சிறையிலுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார். அதற்காக 2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார். சசிகலா செலுத்த வேண்டிய 10 கோடி அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று 2022 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் ஆர்டிஐ இன் கீழ் கேட்ட கேள்விக்கு சிறைத்துறை நிர்வாகம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. இன்னும், சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் சசிகலா விடுதலை செய்யப்பட உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.