55 நாட்களுக்கு பின் மியான்மர் நாட்டு கடற்படையால் மீட்கப்பட்ட மாயமான 9 காசிமேடு மீனவர்கள்!

55 நாட்களுக்கு பின் கடலில் மாயமான காசிமேடு மீனவர்கள், மியான்மர் நாட்டு கடற்படையால் மீட்கப்பட்ட சம்பவம், மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, காசிமேடு, நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், திருவொற்றியூர் குப்பம், திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் ஜூலை மாதம் 23ம் தேதி, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர் .ஆகஸ்ட் 7ம் தேதி கரைக்கு திரும்ப வேண்டியவர்கள் வராததால், அவர்களது குடும்பத்தினர் காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனரகத்திலும், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்திலும், புகார் அளித்தனர்.

இதையடுத்து, அவர்களை தேடும் பணி, தீவிரமாக நடந்தது. இந்நிலையில், 55 நாட்களுக்கு பின், ஒன்பது மீனவர்களும், மியான்மர் நாட்டு கடற்படையினரால், நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மியான்மர் நாட்டின் துாதரகத்தில் இருந்து, இந்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக மீன்வளத் துறையினர், அனைத்து மீனவர்களையும் அழைத்து வரும் பணியில், ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 55 நாட்களுக்கு பின், ஒன்பது மீனவர்களும், அண்டை நாட்டில் மீட்கப்பட்ட சம்பவம், மீனவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: “மீன்வளத் துறை, இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படை மற்றும் சென்னை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகள் மூலம், காணாமல் போன மீனவர்களை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்திய வெளியுறவுத் துறை வழியாக மியான்மர், வங்கதேசம் மற்றும் தாய்லாந்து கடல் பகுதியிலும், மீனவர்களை தேடும் பணிகள் நடந்தன.

இந்நிலையில், மியான்மர் நாட்டு கடற்படையினரால், ஒன்பது மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக அங்குள்ள இந்திய துாதரகம் வழியாக தகவல் பெறப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மீனவர்கள், விரைவில் தமிழகம் திரும்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.” இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x