தமிழகத்திற்கு ரூ.11,269 கோடி பாக்கி: வழங்குவதற்கு நிதி இல்லை என்று கைவிரித்த மத்திய அரசு!
2020 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க நிதியில்லை என மத்திய துணை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. 18 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடரில் 23 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், சீனா எல்லை பிரச்சனை, நீட் தேர்வு, கொரோனா பாதிப்பு உள்ளிட்டவைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி இழப்பீடு தொகை குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்த மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்படுத்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பின்னடைவு கண்டதில் நாட்டின் ஜிஎஸ்டி வரி வருவாய் ஏப்ரல்-ஆகஸ்டில் சரிவு கண்டது. 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2020 ஏப்ரல் முதல் ஜூலை வரை அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.1,51,365 கோடியாக உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்க போதிய நிதி இல்லை. ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருப்பதால் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க போதிய நிதி தற்போது இல்லை என தெரிவித்தார்.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.22,485 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.13,763 கோடியும், உ.பி.க்கு ரூ.11,742 கோடியும் குஜராத்துக்கு ரூ.11,563 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.11,269 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.7,750 கோடி, கேரளாவுக்கு ரூ.7,077 கோடி, பஞ்சாப்பிற்கு ரூ.6,959 கோடி, டெல்லிக்கு ரூ.6,931 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.6,312 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.5,424 கோடி மற்றும் சத்திஸ்கருக்கு ரூ.2,827 கோடி அளிக்க வேண்டியுள்ளது.
ஆனால் ஆகஸ்ட் 2020-வரை நிகர ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,81,050 கோடிதான். பட்ஜெட் மதிப்பீட்டில் இது 26.2% தான் என்றார். நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.2.35 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பை எதிர்நோக்குகின்றன. இதில் மத்திய அரசின் கணக்கீட்டின்படி ரூ.97,000 கோடி இழப்பு ஜிஎஸ்டி அமலாக்கத்தினாலும் மீதி 1.38 லட்சம் கோடி இழப்பு கோவிட் 19-னால் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.97,000 கோடியை ஆர்பிஐ-யின் சிறப்பு சாளர வசதி மூலமாகவோ அல்லது மாநிலங்கள் ரூ.2.35 லட்சம் கோடியை வெளியிலிருந்து கடன் வாங்கியோ ஈடுகட்டலாம் என்று மத்திய அரசு இரண்டு தெரிவுகளை வழங்கியது. 2020-21 மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் ரூ.6,90,500 கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.