ரூ.10 கோடி அபராதத்தை செலுத்த தயார்…!! அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்

10 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத் தாக்கல் செய்துள்ளார். சுதாகரன் தனது அபராத தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்திய நிலையில், சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1991-96ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்த நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தாவிடில் மேலும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் உள்ளனர். கடந்த வாரம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சுதாகரன், இளவரசிக்கான அபராத தொகையை செலுத்தி விட்டனர். சசிகலாவிற்கு அபராத தொகையை செலுத்த அனுமதி கிடைக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், வழக்கமாக நடைமுறைகளின்படி, அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தியுள்ள நிலையில், சசிகலாவும் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு நாளில் அதற்கான முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.