கொடைக்கானலுக்கு செல்ல இனி இ-பாஸ் தேவையில்ல… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இனி இ-பாஸ் தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு படிப்படியாக சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. கடந்த மாதம் வரை வரை அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் செய்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாவட்டங்களுக்கு வெளியேயான பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியானது.
அதனைத் தொடர்ந்து, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமம் இன்றி சென்று வருகின்றனர். எனினும் கொடைக்கானல், ஏற்காடு, உதகை போன்ற சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வெளியூரில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுவரவேண்டும் எனவும் உள்ளூர் பயணிகள் அடையாள அட்டையை காண்பித்து கொடைக்கானல் பகுதிக்குள் வந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், “கொடைக்கானல் மலைப்பகுதிக்கு இனி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இ- பாஸ் இன்றி, பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் செல்லலாம். முதல்கட்டமாக வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.