“புதிய கல்விக்கொள்கை குழந்தைகளை 2000 ஆண்டுகள் பின் நோக்கி அழைத்துச் செல்லும் பிற்போக்குத்தனமானது!” மல்லிகார்ஜுன் கார்கே!!

புதியக் கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமானது. நம் குழந்தைகளை எதிர்காலத்துக்குத் தயார் செய்யாமல் அவர்களை 2000 ஆண்டுகள் பின் நோக்கி அழைத்துச் செல்லும் விதமாக உள்ளது என்று மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவாதத்தை கிளப்பிய கார்கே, புதியக் கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமானது. நம் குழந்தைகளை எதிர்காலத்துக்குத் தயார் செய்யாமல் அவர்களை 2000 ஆண்டுகள் பின் நோக்கி அழைத்துச் செல்லும் விதமாக உள்ளது. பள்ளிக்கல்வி, அரசியலமைப்புக் கொள்கைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். பழமையான கலாச்சார விழுமியங்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது. அரசும், மதமும் தள்ளித் தள்ளி இருப்பதுதான் நல்லது.

மேலும் புதியக் கல்விக் கொள்கை 10ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் 35% கல்வி இடைநிறுத்தம் என்ற பிரச்சினையை எதிர்கொள்ளவே இல்லை. இந்தியாவில் 50% மாணவர்கள் பள்ளிப்படிப்பை 10ம் வகுப்பிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதில் 33% தலித்துகள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
2035-ல் இந்தியா தனது இளம் சமுதாயத்தின் சாதகப் பலன்களை இழந்து விடும். 15 ஆண்டுகளுக்குள் நாம் சரி செய்தாக வேண்டும். கணிதம், அறிவியல், ஆங்கிலப் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள், நலிவுற்ற சமுதாயத்தினர் ஏற்கெனவே நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளின் மூலம் சாதகமடைவதில்லை. இந்தியப் பண்பாட்டை தங்கள் மொழி மற்றும் இலக்கியங்கள் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள். சமஸ்கிருதத்தையும் இந்தியையும் வளர்த்தெடுக்கும், திணிக்கும் முயற்சிகளினால் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு நவீனக் கல்வி கிடைக்காமலே போய்விடும்.
ஆசிரியர்கள் ஏற்கெனவே தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, வாக்சின் திட்டம் என்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதோடு புதியச் சுமையும் அவர்கள் மீது ஏற்றப்படுகிறது, இப்படியே போனால் கல்வித்தரத்தை மேம்படுத்தவே முடியாது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.