பருப்பு விலை உயர்கிறது: தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம்

வடமாநிலங்களில் மழையால் பயிர்கள் நாசமாகி வருகின்றன. இதனால் பருப்பு விலை உயரத் தொடங்கியுள்ளது. பண்டிகை சீசன் நெருங்குவதால் விலை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமாநிலங்களில் கடும் மழையால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயிர்கள் நாசமாகின. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் மழை காரணமாக உளுந்து மற்றும் பாசி பயிர்கள் சேதம் அடைந்தன. இதுபோக எஞ்சிய இடங்களில் நடந்த அறுவடைகளை தொடர்ந்து, சந்தைக்கு புது வரத்து தொடங்கியுள்ளது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தின் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள சில மண்டிகளுக்கு வந்த பருப்பு வகைகள் அதிக ஈரப்பதத்துடனும், தரம் குறைந்தவையாகவும் இருந்தன.

இந்த மண்டியில் உளுந்து குவிண்டால் ₹6,500 முதல் ₹7,000 வரை விலை போனது. சராசரி ரகம் குவிண்டாலுக்கு ₹5,500 முதல் ₹6,000 வரையும், தரம் குறைந்த உளுந்து ₹3,500 முதல் ₹5,500 வரையிலும் விலை போனது. இது முன்பிருந்த விலையை விட சற்று அதிகம். இதுபோல், மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள நிமார் மண்டலத்தில் உள்ள சந்தையில் பாசிப்பருப்பு புதிய வரத்து தொடங்கியுள்ளது. இவையும், குறைந்த தரம் மற்றும் அதிக ஈரப்பதம் கொண்டவையாக உள்ளன. உயர் ரக பாசிப்பருப்பு இந்தோரில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ₹6,700 முதல் ₹7,000 வரை ஏலம் போனது. துவரம் பருப்பும் கணிசமான அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

இறக்குமதி மற்றும் உள்நாட்டு இருப்பு குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். மகாராஷ்டிரா துவரம் பருப்பு குவிண்டாலுக்கு ₹6,500 என வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்துக்கு கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து பருப்பு வகைகள் வருகின்றன. வடமாநிலங்களின் சில பகுதிகளில் மழையால் பயிர்கள் நாசமானதால், சில பருப்பு வகைகள் விலை உயர தொடங்கியுள்ளன. தரம் குறைந்த பருப்பு வகைள் மற்றும் தரமான வரத்து குறைவு போன்ற காரணங்களால் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், பண்டிகை நெருங்கும் நிலையில் இது விலை உயர்வுக்கு வழி வகுக்கும் எனவும் வடமாநில வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x