உ.பி.யில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு!!

உத்தரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டம், கல்பி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2008-ம் ஆண்டு காணாமல் போனார். இதுகுறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களில் கான்பூர் மாவட்டம் கவுதம்பூரில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தன்னுடைய மகளின் உடல்தான் என கல்பி நகரில் காணாமல் போன சிறுமியின் தாய் அடையாளம் காட்டினார்.
இது தொடர்பாக 6 பேர் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் போலீஸார் பாரபட்சம் காட்டுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குசிபிசிஐடி வசம் ஒப்படைக் கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற 5 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர் அலிகர் நகரில் உயிருடன் இருப்பதை ஜலாவுன் போலீஸார் கண்டுபிடித்தனர். இப்போது 26 வயதாகும் அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி விட்டதும் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணை கல்பி நகருக்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரும் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.