“நடிகர் சூர்யா மீது நடவடிக்கை இல்லை.. ஆனால் இனி கவனமுடன் பேச வேண்டும்” உயர்நீதிமன்றம் அறிவுரை!!

நீட் விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதித்ததாக சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தொடர மனு அளிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர முடியாது என தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தால் தமிழக மாணவர்கள் ஒரே நாளில் மூவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா “நீதிமன்றங்களே கொரோனாவுக்கு பயந்து காணொளியில் வழக்குகளை நடத்தி வரும் நிலையில், மாணவர்களை தேர்வெழுத வற்புறுத்துகிறது” என்று கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கோரியிருந்தார். அதே நேரத்தில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பி சாஹுவுக்கு முன்னாள் நீதிபதிகளான சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், அக்பர் அலி, கண்ணன் ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சூர்யா கருத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தேவையில்லை என மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அதேசமயம் பொதுவான கருத்துகள் பேசும்போது நடிகர் சூர்யா கவனமாக பேச வேண்டும் என்றும், நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.