ஓடிடி நிறுவனங்களுக்குப் போட்டியாக, களத்தில் அதிரடியாக இறங்கும் சன் டிவி!

ஓடிடி நிறுவனங்களுக்குப் போட்டியாக சன் டிவி நிறுவனம் புதிய திட்டமொன்றை உருவாக்கியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. எப்போது திறக்கப்படும் என்பதே இன்னும் தெரியாமல் உள்ளது. திரையரங்குகள் திறப்பு தொடர்பாக மத்திய அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று இந்தியத் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திரையரங்குகள் திறக்காததால் தயாராகியுள்ள பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் மத்தியில் ஓடிடி தளங்களும் பிரபலமாகி வருகின்றன. அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜீ 5, நெட் ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட பல தளங்களும், முன்னணி நடிகர்களின் படங்களின் படங்களைப் போட்டிப் போட்டி வாங்கி வெளியிட்டு வருகின்றன.

இதனிடையே, ஓடிடி நிறுவனங்களுக்குப் போட்டியாக சன் தொலைக்காட்சியும் களமிறங்குகிறது. எப்படியென்றால், படங்களை வாங்கி ஒரே சமயத்தில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியீடு மற்றும் சன் டிவியிலும் ப்ரீமியர் செய்வது எனத் திட்டமிட்டுள்ளது. மேலும், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்காகவே படங்களைத் தயாரிப்பது எனவும் முடிவு செய்துள்ளது.
சன் டிவியில் ப்ரீமியர் என்ற அடிப்படையில் தமிழில் உருவாகும் ‘மாயாபஜார் 2016’ ரீமேக் படத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றிப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பணிகளை முடித்து தீபாவளிக்கு சன் டிவியில் ப்ரீமியர் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், முத்தையா இயக்கத்தில் புதிய படமொன்றுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் படமும் நேரடியாக சன் நெக்ஸ்ட்டில் வெளியீடு, சன் டிவியில் ப்ரீமியர் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. சன் நிறுவனத்தின் இந்தத் திட்டம், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.