கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி அதிரடியாக நீக்கம்!!
விதிமீறல் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் தற்போது மக்கள் மிகவும் முக்கியமாக பயன்படுத்துவது Paytm செயலி. ஆனால், விளையாட்டு மற்றும் சூதாட்டத்தற்கு துணை புரிவதாக கூறி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலியை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
ஏற்கனவே பயன்படுத்துபவர்களுக்கு எந்த சிக்கலும் வராது எனவும் பயனாளர்களின் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்போது Paytm செயலி மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தால் கையாளப்படுகிற மற்ற செயலிகளான Paytm for Business, Paytm Money போன்ற செயலிகள் இன்னும் கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ள இந்த செயலி ஆப்பிள் ஸ்டோரில் உள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் சூதாட்டத்திற்கு எதிரான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம். எங்களது கொள்கைப்படி, ஆன்லைன் கசினோக்கள் மற்றும் விளையாட்டு பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒழுங்குபடுத்தப்படாத சூதாட்ட ஆப்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஏதேனும் ஒரு செயலி தங்களது நுகர்வோரை வெளி இணையதளங்களில் பந்தயங்களில் பங்கேற்கச் செய்து அவர்களுக்கு பணமும், ரொக்கப் பரிசுகளும் வழங்கினால் அது எங்களது கொள்கைகளை மீறுவதாகும். அதற்கு தடை விதிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.