6 அடி நீள பாம்பை வெட்டி ‘சைடிஷ்’ ஆக சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள்!

மேட்டூரில் 6 அடி நீள பாம்பை துண்டு துண்டாக வெட்டி, வாலிபர்கள் சமைத்து சாப்பிடும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள தங்கமாபுரிபட்டணம் வடபத்திரகாளியம்மன் கோயிலின் பின்பகுதியில் இருக்கும் காலியிடத்தில் கும்பலாக மது குடித்தல், சூதாடுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், கருமலைக்கூடல் போலீசில் தொடர் புகார் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை, மேட்டூர் பகுதியை சேர்ந்தவர்களின் செல்போன்களில் 2 வீடியோக்கள் வைரலாக பரவியது. அதில், 6 அடி நீள பாம்பை துண்டு துண்டாக 2 வாலிபர்கள் வெட்டுகின்றனர். தோல் உரிக்கப்பட்டு, குடல் நீக்கி மீனை வெட்டுவது போல், பாம்பை துண்டு துண்டாக வெட்டி எடுக்கின்றனர். பிறகு, ஒரு பாத்திரத்தில் மசாலா தடவி பொரித்து எடுத்து, வாழை இலையில் வைத்துள்ளனர். அதனை மது குடித்துக் கொண்டே வாலிபர்கள் ருசிக்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த அப்பகுதி மக்கள், தங்கமாபுரிபட்டணம் வடபத்திரகாளியம்மன் கோயில் பின்புறத்தில், இச்சம்பவம் நடந்திருப்பதை கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக மேட்டூர் வனத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் புகார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களையும் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.