“சுனாமியால் அழிந்ததா கீழடி.?” ஆய்வு செய்து வரும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்!

கீழடியில் வாழ்ந்த மக்கள் எங்கு சென்றனர், இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் என்ன என நிலவியல் துறை ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு பணிகள் நேற்று தொடங்கியுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் பழமையான பானைகள், இணைப்பு குழாய் பானைகள், கட்டிடங்கள், தங்க நாணயம், எடை கற்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. இவை 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்கள் சங்ககால தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்ததை நிரூபிக்கின்றன.

இங்கு வாழ்ந்த மக்கள் எங்கு சென்றனர், இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் என்ன என நிலவியல் துறை ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. இதற்காக கீழடியில் உள்ள கருப்பையாவின் நிலம் மற்றும் சுற்றியுள்ள நிலங்களில் சர்ஃபேஸ் ஸ்கேனர் என்ற நவீன லேசர் கருவி மூலம் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த லேசர் கருவிகள் தரைமட்டத்தில் இருந்து 500 மீட்டர் ஆழத்திற்கு ஊடுருவி, கீழே பழங்கால கட்டிடங்கள், பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்யும் திறன் கொண்டவை.

டேராடூன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிலவியல் துறை தலைவருமான பேராசிரியர் ஜெயம்கொண்ட பெருமாள் தலைமையில் 2 ஆராய்ச்சி கல்லூரி மாணவர்களுடன் நேற்று ஆய்வு பணிகள் தொடங்கின. இதற்காக கீழடியில் தரைதளத்தில் இருந்து 13 மீட்டர் ஆழம் வரை பல்வேறு இடங்களில் மண் அடுக்குகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வைத்து கீழடி நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

இது குறித்து நிலவியல் துறை ஆய்வாளர் பெருமாள் கூறுகையில்,‘‘சங்கத்தமிழ் வளர்ந்த நகரம் கீழடி. இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து சர்ஃபேஸ் ஸ்கேனர் என்ற நவீன லேசர் கருவி மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். கீழடி பகுதி கடல் உள்வாங்கியதால் அழிந்திருக்குமா, சுனாமி போன்றவற்றால் அழிந்திருக்குமா, மக்கள் இடம் பெயர்ந்ததால் அழிந்திருக்குமா என ஆய்வு செய்ய உள்ளோம்’’ என்றார்.

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19ல் தொடங்கி நடந்து வருகிறது. செப்டம்பருடன் பணிகள் முடிவடைய உள்ளன. வரும் ஜனவரியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x