கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2,000 கோடி ஊழல்

கர்நாடகாவில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில், 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியதாவது:
கொரோனாவால் மக்கள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வேளையில், கர்நாடக அரசு, மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் செய்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதற்கு, இதுவரை 4 ஆயிரத்து 167 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
சில மாநிலங்கள், ஒரு வென்டிலேட்டரை, 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ள நிலையில், கர்நாட அரசு, 5 லட்சத்திலிருந்து 21 லட்சம் வரை செலவு செய்துள்ளது. பா.ஜ.கவின் இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த முறைகேடு குறித்து உடனடியாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முதலமைச்சர் திரு. எடியூரப்பா, புகாரை சட்டரீதியாகச் சந்திக்கத் தயராக இருப்பதாக கூறினார்.