மத்திய அரசை விமர்சித்த பிரபல டெல்லி பத்திரிகையாளர் கைது! ரகசிய ஆவணங்கள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு

மத்திய அரசையும், அவர்களுக்கு ஆதரவளித்து வரும் ஊடகங்களையும் தொடர்ந்து விமர்சித்து பதிவுகளை போட்டு வந்த பிரபல பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவை, ரகசியங்கள் காப்பு சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
ஆய்வாளரும், சுதந்திர பத்திரிகையாளருமான ராஜீவ் ஷர்மா, இதற்கு முன்னர், யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா, தி ட்ரிப்யூன், மற்றும் சாகல் டைம்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர். தற்போது, 12 ஆயிரம் ஃபாலோயர்ஸ் உள்ள ‘ராஜீவ் கிஷ்கிந்தா’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் போடும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் பிரபலமடைந்து வந்தன.
சமீபத்தில், அவர் இரண்டு வீடியோக்களை பதிவேற்றினார். அதில், ஒன்று, ‘சீனா இன்னும் குறும்புகள் செய்யலாம் #IndiaChinaFaceOff’ என்ற தலைப்பில் எட்டு நிமிட வீடியோவாக வந்தது. அதில் அவர் இந்தியாவிற்கும் சீனாவிற்கும், வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே “ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டாலும், அமைதிக்கான பாதை சில காரணங்களால் தடுக்கப்படுகிறது” என கூறியிருந்தார். மற்றொரு நான்கு நிமிட வீடியோவில் ஊடகங்களின் நிலை என்ற தலைப்புடன் ட்வீட் செய்துள்ளார், “இன்று இந்திய ஊடகங்களின் நிலை பரிதாபகரமானது. இது ஒரு கண்காணிப்புக் குழுவாக இருக்க வேண்டும். மாறாக அது அரசாங்கத்தின் மடிக்கணினியாக மாறியுள்ளது. ” என்று கூறியிருந்தார்.
இதனால், மத்திய அரசு ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் திடீரென கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். அவர் பாதுகாப்பு தொடர்பான சில வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.