10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி கொடுத்த வள்ளல்.. போலிசாரால் கைது!!

விழுப்புரத்தில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவையே என்று ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கம் அளித்து விட்டது. இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி ஆங்காங்கே இன்னமும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் ஆயிரம், 2 ஆயிரம் என ஆயிரக்கணக்கில் 10 ரூபாய் நாணயங்களை வைத்திருப்பவர்கள் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். சிறு வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்க மறுப்பதோடு வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் பலரும் கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடையில் 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற ஒரு ருசிகர தகவல் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகியது.
இதையறிந்த விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளின் மூலை முடுக்கெல்லாம் 10 ரூபாய் நாணயங்களை அலசி ஆராய்ந்து தேடி கண்டுபிடித்து பிரியாணி கடை முன்பு திரண்டனர். நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் வெகு நேரமாகியும் பிரியாணி வராததால் பலர், பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கே நேரில் சென்றனர். ஆனால் அங்கு பிரியாணி வழங்கப்படாது என்றும், கடையில் வைத்துதான் பிரியாணி வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் அவர்கள் அங்கிருந்து மீண்டும் கடைக்கு வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பிரியாணி வந்திறங்கியதும் அங்கு காத்து நின்ற பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பிரியாணி வாங்க சென்றனர்.
இந்த கூட்டத்தை பார்த்த விழுப்புரம் தாலுகா போலீசார், அந்த கடைக்கு விரைந்து சென்று அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் அப்புறப்படுத்தினர். பின்னர் வேறொரு இடத்தில் பிரியாணி கடையை உரிமையளர் திறந்தனர். அங்கும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் பிரியாணி வாங்க காத்திருந்த பொதுமக்கள் நாலாபுறமும் தெறித்து ஓடினர். அதன் பின்னர் பொதுமக்கள், பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கே சென்றனர். இதனால் வேறு வழியின்றி அங்கு வைத்தே பொதுமக்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை பெற்று சிக்கன் பிரியாணி வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கிச்சென்றனர். இருப்பினும் பலருக்கு பிரியாணி கிடைக்காததால் அவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இதனிடையே பிரியாணி கடை உரிமையாளரான விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த அரவிந்தன் (வயது 29) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நேற்று புதிதாக பிரியாணி கடையை திறந்துள்ளதும், கடையை பிரபலமாக்கும் வகையில் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்ததும் தெரியவந்தது. இருப்பினும் மக்கள் கூட்டம் கூடினால் கொரோனா நோய் தொற்று பரவும் என்று தெரிந்திருந்தும் சாலையோரம் கடையை திறந்து ஊரடங்கு விதியை மீறி மக்கள் கூட்டம் கூடுவதற்கு காரணமாக இருந்ததற்காக அரவிந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.