புதுத்திட்டங்கள் கிடையாது; கைவிரித்த மத்திய அரசு!

நடப்பு நிதியாண்டில் எந்தவொரு புதிய திட்டத்திற்கும் அனுமதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக முடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவில் நிதி தேவைப்படும் என்பதால் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2020-21, 2021-22 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் சம்பளம் 30 சதவிகிதம் குறைக்கப்படுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் எந்தவொரு புதிய திட்டத்தையும் தொடங்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் அனைத்து அமைச்சகங்களையும் துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளது, மேலும், கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக நிதியை சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிதியாண்டுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை இடைநிறுத்தம் செய்யப்படும். கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்களும் இதில் அடங்கும்.
“கொரோனா காரணமாக மத்திய அரசிடம் இருக்கும் பொது நிதியை பயன்படுத்துவதில் மாற்றங்கள் செய்வது கட்டாயமாகியுள்ளது. தொடர்ந்து ஏற்பட உள்ள மாற்றங்களுக்கு ஏற்ப நிதிப் பங்கீடு மாற்றம் செய்யப்படும். மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் இந்த நிதியாண்டு முழுவதும் அறிவிக்கப்படாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று நிதியமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.