காரில் 2 கிலோ போதை பொருள் கடத்திய பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் கைது!

பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர், மற்றும் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ அடைக்கலராஜ் என்கிற மாணிக்கம், திருச்சி அருகே 2 கிலோ போதைப் பொருளான அபின் கடத்தியதற்காக, திருச்சி அருகே ஹூண்டாய் காரோடு பிடிபட்டார். அந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் இருக்கும் என தெரயவந்துள்ளது.

அண்மையில் ஜூன் 12ம் தேதி மாநிலத் தலைவர் முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, கடத்தலில் கைதான அடைக்கலராஜ் பிஜேபி கட்சியில் பெரம்பலூர் மாவட்ட துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு, இவர் கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியலில் இருந்து வருகிறார்.
திருச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையினருக்கு காரில் அபின் போதைப் பொருள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், திருச்சி மன்னாா்புரம் பகுதியில் திருச்சி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காமராஜ், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்குரிய காரை நிறுத்தி விசாரணை செய்ததில், அதில் இருந்தோா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா். தொடா்ந்து, சோதனை மேற்கொண்டதில் காரில் அபின் எனும் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த பெரம்பலூரைச் சேர்ந்த அடைக்கலராஜ் (40), ஜெயபிரகாஷ் (40), ஆறுமுகம் (65), பாலசுப்பிரமணியன் (40), நொச்சியத்தைச் சோந்த ஆதடையன் (50) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.