எம்.பி.க்களிடையே அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவலால் புதன்கிழமையோடு முடியும் மக்களவை!!

மக்களவை எம்.பி.க்களிடையே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கூட்டத்தொடரை மட்டும் வரும் புதன்கிழமையோடு முடித்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் குழு நேற்று மாலை கூடி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்தது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டுச் சென்ற 3 எம்.பி.க்கள் கொரோானாவில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது.
கூட்டத்தொடருக்கு 72 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என வந்தபோதிலும் எம்.பி.க்கள் கொரோனாவில் பாதிக்கப்படுவது கவலையளித்ததால், இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளதாகத் தெரிகிறது. மக்களவைக் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்வது தொடர்பாக மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையில் அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் வரும் புதன்கிழமையோடு கூட்டத்தொடர் முடிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆனால், மாநிலங்களவை தொடர்ந்து திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை செயல்படும் எனத் தெரிகிறது. மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியதிலிருந்து மக்களவை எம்.பி.க்கள் 17 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 8 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மக்களவை எம்.பி.க்களில் அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இருவர், சிவசேனா, திமுக, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி எம்.பி. ஒருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டுச் சென்ற மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரஹலாத் படேல் இருவரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதில் நேற்றுமுன்தினம் பாஜக மாநிலங்களவை எம்.பி. வினய் சஹஸ்ராபுதே கொரோனாவில் பாதிக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள், பாதுகாவலர்கள் அனைவருக்கும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் கொண்டுவந்த நிலையிலும், எம்.பிக்களும் நாள்தோறும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய அனுமதி அளித்தபோதிலும் தொடர்ந்து கொரோனா பரவல் எம்.பி.க்களிடையே அதிகரித்துள்ளது.
மக்களவைக் கூட்டத்தொடரை முடிக்கும முன்பாக 11 அவசரச் சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள 11 மசோதாக்களையும் மக்களவையில் நிறைவேற்றிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை 3 அவசரச் சட்டங்களுக்கான மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.