“அடுத்த 20 ஆண்டுகளில் அந்தமான், நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்!” நெல்லை பல்கலை துணைவேந்தர் தகவல்!!

பருவ நிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அந்தமான் நிகோபர், மாலத்தீவுகள் 20 ஆண்டுகளில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்தார்.
நெல்லை மண்டல, வங்கக்கடல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் இணையவழிப் பயிலரங்கம், நேற்று காலை துவங்கியது. மதுரை பல்கலைக்கழக மக்கள் தொடர்பியல் பேராசிரியர் நாகரத்தினம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பங்கேற்று பேசினார்.

அவர் கூறுகையில், “பருவநிலை மாற்றம் காரணமாக பனி மலைகள் உருகுவதால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தலைநகரையே மாற்ற அந்த நாடு 7 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கி உள்ளது. சிங்கப்பூர் 72 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் அந்தமான் நிகோபர், மாலத்தீவு 20 ஆண்டுகளில் கடலில் மூழ்கி விடும் அபாயம் உள்ளது.
பருவநிலை மாற்றத்தால் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரித்து வருகிறது. மனிதர்கள் வாழ்வதற்காக ஏதாவது ஒன்றை அழித்து விடுகிறோம். எனவே இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.” இவ்வாறு அவர் பேசினார்.