“மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதது கொஞ்சம் சங்கடமா தான் இருக்கு!” சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து!
![](https://thambattam.com/storage/2020/09/Sheikh_Zayed_Stadium_PTI_Final-780x450.jpg)
ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடியது வீரர்களுக்கு வித்தியாசமான உணர்வை அளித்ததாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் களமிறங்கின. தோனி நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆடும் போட்டி என்பதால் பரபரப்பாக பேசப்பட்டது.
![](https://thambattam.com/storage/2020/09/EiS9QwxU8AEjPVS-e1600589241598-300x179.jpg)
இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்ற போட்டி என்பதால் வீரர்கள் உள்ளிட்டோருக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.
இந்நிலையில் வீரர்களின் ஆட்டம் மற்றும் புதுவித அனுபவம் தொடர்பாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சாம் கரணின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. அதேபோல் அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆட்டத்த வெளிப்படுத்தினார். அவரது திறமையும், அனுபவமும் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தது.
![](https://thambattam.com/storage/2020/09/EiS8-aVkAA7E2A-300x200.jpg)
ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடியது வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதிய அணிகள் தற்போது விளையாடும் போது கூடுதல் பரபரப்பு இருக்கும். இருப்பினும் சிஎஸ்கே வீரர்கள் திறம்பட விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பிராவோ அடுத்த 2 போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்” என்றும் தெரிவித்துள்ளார்.