“பாஸ்டேக் இல்லையென்றால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்” – நிதின் கட்கரி எச்சரிக்கை

பாஸ்டேக் நடைமுறைக்குள் வாகன உரிமையாளர்கள் நாளை நள்ளிரவு முதல் கட்டாயம் வரவேண்டும். இதற்கு மேல் காலஅவகாசம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரி செலுத்தும் போது கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது கொடுக்க கூடுதல் நேரம் எடுப்பதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நேரம் விரயமாகியது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பாஸ்டேக் என்ற முறையை கொண்டு வந்தது.
இந்த நடைமுறையில் சுங்கச்சாவடியில் வாகன நம்பரை ஸ்கேன் செய்து தானாகவே நமது அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும். வாகனம் நீண்ட நேரம் நிற்க வேண்டியதில்லை.
அனைத்து வாகனங்களும் இந்த நடைமுறைக்குள் இன்னும் வராத காரணத்தால், நாளை நள்ளிரவில் இருந்து பாஸ்டேக் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. ஒருவேளை பாஸ்டேக் வசதி இல்லாமலோ, செல்லுபடியாகாமலோ இருந்தால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.