ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்! டிசம்பருக்குள் கிடைத்துவிடும்!

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதை பரிசோதித்ததில், நோய் எதிர்ப்புச்சக்தியை மட்டுமல்லாமல், வைரஸ்களை எதிர்த்து போராடும் வலிமை மிக்க ‘டி’ செல்களையும் உருவாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பரிசோதனை முடிவை இந்திய மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை நிலையை அடைந்துள்ளது.
இது தவிர அடுத்த மாதம் இந்தியாவில் மனிதர்களுக்கு நாங்கள் இந்த தடுப்பூசியை செலுத்தி பார்க்கும் பரிசோதனையை தொடங்கி விடுவோம்.

தற்போதைய நிலவரப்படியும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் குறித்த சமீபத்திய தகவல்கள் படியும், இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் மாதம்) தடுப்பூசி பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த தடுப்பூசியை 100 கோடி ‘டோஸ்’கள் தயாரித்து வினியோகிப்பதற்கு நாங்கள் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த தடுப்பூசி இந்தியாவுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள குறைவான வருமானம் உள்ள நாடுகளுக்காகவும்தான், இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.