பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது, போலீசார் தேச துரோக வழக்கு பதிவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் உள்ளிட்டோர் மீது, போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 70, ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால், நீதிமன்ற அனுமதியுடன் சிகிச்சைக்காக, பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். பாக்., முஸ்லிம் லீக் கட்சி தலைவரான நவாஸ் ஷெரீப், அந்நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி விகித்தவர்.
இதற்கிடையே, தற்போதைய பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் லண்டனில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, தன் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய நவாஸ் ஷெரீப், பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: பாக்., ராணுவம், 2018 தேர்தலில் செய்த முறைகேடுகளால், இம்ரான் கான் ஆட்சியை பிடித்தார். ராணுவம் அரசியலில் தலையிடுவதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராக செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம், பிரதமருக்கு எதிரானது அல்ல. இதுபோல் செயல் திறனற்ற, தகுதியற்ற ஒருவரை, பிரதமர் பதவியில் அமர வைத்த மக்களுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்படுகிறது, இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும், ராணுவ தலைமை ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மீதும், பல்வேறு குற்றச்சாட்டுகளை நவாஸ் ஷெரீப் கூறினார். இதையடுத்து நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் அவர்களது கட்சி தலைவர்கள் மீது, ராணுவம் மற்றும் நீதித்துறைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக, தேசத் துரோகம் உட்பட கடுமையான பிரிவுகளில், பாக்., போலீசார், நேற்று வழக்கு பதிவு செய்தனர்.