கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்லும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்!!

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கும், இரண்டாக பிரிக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணிக்கு சென்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிர்வாக வசதிகளுக்காக அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்க படுவதாகவும் அதில் ஒரு பிரிவு அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் எனவும், மற்றொரு பிரிவு அண்ணா பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டு செயல்படும் எனவும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு நிறைவேற்றிய இந்த புதிய சட்ட மசோதாவுக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் இதை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக அரசு இந்த புதிய சட்ட மசோதாவால் 41 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழ் மறைக்கப்படும் எனவும் பேராசிரியர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் இந்த சட்ட மசோதாவால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் சிறந்த பல்கலைக்கழகத்துக்கான மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாகவும் இட ஒதுக்கீட்டுக்கான வரையறை மதிப்பெண்ணும் மாணவர்களின் கல்வி கட்டணமும் உயரும் எனவும் பேராசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்குச் சென்றனர். இதேபோல் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவிக்க உள்ளதாகவும் பேராசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடவும் தயாராக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.