சிறையில் நேர்ந்த கொடுமைகள் குறித்து, சர்வதேச மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் எழுதிய மருத்துவர் கபீல் கான்!

உத்திரபிரதேச மருத்துவர் கபீல் கான், சமீபத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு (UNHRC) கடிதம் எழுதியுள்ளார்.
டிசம்பர் 12, 2019 அன்று CAA க்கு எதிரான போராட்டத்தின் போது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி, மும்பையில் உத்தரபிரதேச சிறப்பு போலீசாரால் மருத்துவர் கபில்கான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்து இந்த மாத தொடக்கத்தில் அவரை விடுவித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். அவரது பேச்சு குறித்து தீர்ப்பில், “வெறுப்பை அல்லது வன்முறையை தூண்டியதற்கான எந்த அறிகுறியும் அதில் இல்லை” என்று கூறியிருந்தது. இதையடுத்து அவர் செப்டம்பர் 2 ம் தேதி மதுரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மருத்துவர் கபீல்கான் தனது கடிதத்தில், “இந்தியாவில் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதற்கும், எதிர்ப்பின் குரல்களை அடக்குவதற்கும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) மற்றும் உபா(UAPA) போன்ற கடுமையான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது” என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்புக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், சிறையில் இருந்த காலத்தில், அவர் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் தொடர்ந்து 7 மாதங்களாக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன், பல நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் எனக்கு மறுக்கப்பட்டது. இவ்வாறு, நெரிசலான மதுரா சிறையில் எனது 7 மாத சிறைவாசத்தின் போது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக, உயர்நீதிமன்றத்தால் என் மீதான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது” என்று அவர் சிறையில் இருந்த நாட்களை விவரித்துள்ளார்.

“CAA க்கு எதிராக அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆர்வலர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியதற்காக UNHRC க்கு நன்றி தெரிவித்துள்ள அதே வேளையில், அரசாங்கம் “அவர்களின் முறையீட்டைக் கேட்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூன் 26 அன்று, ஐ.நா. அமைப்பு இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.