தேவாலயத்தின் மீது குண்டு வீசிய மர்ம நபர்கள்..! உயிர் தப்பிய பக்தர்கள்!!

திண்டுக்கல் அருகே, தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களுள் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மேலகோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் தேவாலயத்தின் பக்கவாட்டு சுவர் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேவாலயத்தின் பங்குத்தந்தை ஜெயராஜ் தலைமையில் நேற்று மாலை நேர வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்கவே, தேவாலயத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
பின்னர் தேவாலயத்திற்கு வெளியே வந்து பார்த்தபோது, ஆலய பக்கவாட்டு சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீப்பிடித்து எரிவதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சிலர் தப்பி ஓடுவதை ஆலயத்தில் இருந்தவர்கள் பார்த்து வத்தலக்குண்டு காவல் துறையிருக்கு தகவல் கொடுத்தனர்.
காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை கைது செய்து, இந்திய தண்டனை சட்டம் 436ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நாகராஜின் கூட்டாளிகள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.