ஜேம்ஸ் பாண்ட் படத்தின் நிஜ துப்பாக்கிகள் கொள்ளை; ரசிகர்கள் அதிர்ச்சி!!

லண்டனில் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நிஜ துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
டை அனதர் டே’ படத்தில் ரோஜர் மூர் பயன்படுத்திய மர கைப்பிடி கொண்ட மேக்னம் துப்பாக்கி மிகவும் அரியது. தற்போது உலகிலேயே இந்த வகை துப்பாக்கி இது ஒன்றுதான் உள்ளது. லண்டன் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட இருந்த இந்த துப்பாக்கிகள் தற்போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய பூர்வீகம் கொண்ட சில திருடர்கள் வேன்களில் வந்து அதனை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த திருட்டு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பொதுவாக இதுபோன்ற அரிய பொருட்களைத் திருடி கள்ளச்சந்தையில் விற்க திருடர்கள் பலர் முயன்று வருகின்றனர்.
பழமையான பொருட்கள் அதிகமாக லண்டன் நகரில் ஏலம் விடப்படும். இந்த பொருட்களுக்கு கள்ளச்சந்தையில் மவுசு அதிகம். இவற்றை இணையத்தில் ஏலம் விடவும் சில நிறுவனங்கள் முயற்சிக்கும். லண்டன் என்ஃபீல்ட் நகரில் இருந்து இந்த துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன.
பாண்ட் படங்களில் உண்மையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே இந்த படங்களின் சிறப்பம்சம். அதனால் ஜேம்ஸ்பாண்ட் பட பிரியர்கள் மத்தியில் இந்த துப்பாக்கிகள் மிகவும் பிரபலமானது. இவற்றை நேரில் வந்து பார்க்க ஐரோப்பிய நாடுகளில் பலர் ஆர்வம் காட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.