தீப்பெட்டி தர மறுத்த பெண்ணுக்கு, போதை சிறுவனால் நேர்ந்த கொடூரம்!
![](https://thambattam.com/storage/2020/09/lit-matchstick-png-1-780x470-1.jpg)
கிருஷ்ணகிரி அருகே தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பனந்தோப்பு அருகே உள்ள மங்கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் மேச்சேரி. இவரது மனைவி பச்சியம்மாள் (22). கூலித் தொழிலாளி. இவரது உறவினர் மகன் 17 வயது சிறுவன். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பச்சியம்மாள் வீட்டிற்கு சென்ற சிறுவன், தீப்பெட்டி கேட்டார். அதற்கு பச்சியம்மாள் தீப்பெட்டி இல்லை எனக் கூறினார். இதையடுத்து அங்கிருந்து சிறுவன் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின் பச்சியம்மாள், அவர் வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த சிறுவன் உரிமம் பெறாத நாட்டுத்துப் பாக்கியால் பச்சியம்மாளை சுட்டார். இதில் அவருக்கு இடது கை, வலது முழங்கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் துப்பாக்கியை வீசி விட்டு சிறுவன் தப்பியோடினார். காயம் அடைந்த பச்சியம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர காவல் உதவி ஆய்வாளர் ஜெய்கீர்த்தி, சிறுவன் மீது கொலை முயற்சி, ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், தப்பியோடிய சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.