“என்ன தல.. இப்படி பண்ற?” சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு கடிதம் எழுதியுள்ள முரட்டு பக்தன்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு அவரது ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

சார்ஜாவில் நேற்றிரவு அரங்கேறிய ஐபிஎல் போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடைசி நேரத்தில் தோணி இறங்கியதும், அதிரடியாக விளையாடாமல் இருந்ததும் அதிர்ச்சி அளித்தது.

இது குறித்து பெயர் குறிப்பிடாத தோனியின் முரட்டு ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது, “2004ல நீங்க இந்திய ஒன்டே டீம்ல சேர்ந்ததுல இருந்து உன்னோட ஒவ்வொரு போட்டியையும் பார்த்து, ரசிச்ச உரிமையில இந்த ஓப்பன் லெட்டர உனக்கு எழுதுறேன் தல. கண்டவனெல்லாம் கழுவி ஊத்த ஆரம்பிச்சிட்டான், ஆனா நான், நட்பு சுட்டுதலோட நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்க உரிமை இருக்குன்னு நம்பி எழுதுறேன்.

ஆஸ்திரேலியாவுக்கு மைக்கேல் பெவன், தென் ஆப்பிரிக்காவுக்கு க்ளூசினர், பாகிஸ்தானுக்கு அப்துல் ரசாக்.. அவ்வளவு ஏன், குட்டி நாடு இலங்கைக்கு கூட ஒரு ரசல் அர்னால்டு பினிஷரா வாய்ச்ச போது, நமக்கு மட்டும் நயன் மோங்கியாதானான்னு, நட்ட நடு ராத்திரி கூட எந்திரிச்சி யோசிச்சிருக்கேன். சச்சின் அவுட்டானா பாதி நம்பிக்கை போயிரும்.. மோங்கியா அவுட்டானா மொத்த டீமும் போயிரும். மத்த டீமுக்கெல்லாம் 10 விக்கெட்டுன்னா, நம்ம டீமுக்கு மட்டும் 6 விக்கெட் போனாலே அம்புட்டும் குளோஸ். அதுக்கு மேல அடிக்க யாரு இருந்தா சொல்லு?

ஏதோ ராபின் சிங் கொஞ்சம் நம்பிக்கை தந்தாரு. ஆனா, அவரும், ஆப் சைடுல பந்து போட்டா சிங்கிள்தான் அடிப்பாரு. யுவராஜ் சிங் வந்த பின்னாடிதான், 7 விக்கெட் விழுற வரையாவது மேட்ச் பாக்குற தெம்பு வந்துச்சு. ஆனா நீ வந்த பிறகுதான தலைவா.. 9 விக்கெட் போனாலும், ஆப்போசிட் டீம் முகத்துல மரண பயத்த பார்க்க முடிஞ்சது! மற்ற பேட்ஸ்மேன்லாம் என்னதான் அடிச்சாலும், எப்போ அவுட்டாவாங்கன்னு யாருக்கும் தெரியாது. விரல் ரெண்டையும் கிராஸ் பண்ணி விண்ணை நோக்கி வேண்டிக் கொண்டு இருப்போம். ஆனா நீ களத்தில் நின்னா, எப்படியும் வின் பண்ணாம வெளிய வரமாட்டியே.

நீ ஜெயிச்சிக் கொடுத்த கப் எண்ணிக்கையை நான் பேச விரும்பல. ஏன்னா.. நான் புள்ளி விவர காதலன் இல்ல.. பவுலர்கள நீ போட்டு பொளக்குறத ரசிக்குற காதலன். எனக்கு தேவை, உன் பேட் விளையாடுறத பார்க்குறதுதானே தவிர, உன் மூளை விளையாட்டு எனக்கு அவசியமில்லை.

உனக்கு தெரியுமோ தெரியாதோ.. ஓப்பனா சொல்றேன் தல.. கொஞ்சகாலமாவே நீ பேட்டிங்ல சொதப்புற.. அதுவும் உலக மகா சொதப்பல் சொதப்புற. நீ அடிக்குற 100 மீட்டர் சிக்சை புதுசா பார்குறவங்களுக்கு இவருக்கு என்ன குறைச்சல்னு கேட்கத் தோணும். ஆனா, ஆரம்பத்துல இருந்து உன்னை பார்க்குற எனக்குத்தான் தெரியும், 100 மீட்டர் சிக்சுக்கு முன்னாடி நீ 100 பாலை மீட் பண்றங்குறது. இதுக்கு முன்னாடி நீ இப்படி இருந்தது இல்லையே தல.. யார்க்கர் போட்டா ஹெலிகாப்டர் ஷாட்.., ஷாட் பால் போட்டா பின்னாடி வந்து ஒரு ஃபுல் ஷாட், ஆப் சைட்ல போட்டா பாயிண்ட்டுக்கு மேல பந்தாவா கட் அடிப்பியே.. எங்கே பந்து போடன்னு எதிரணிய குழம்ப வச்ச நீ.. இப்போ எங்கே பந்து போனாலும் குழப்பத்தோட பார்த்துட்டு நிக்குறத பார்க்க முடியலயே ராஜா.

வயசானா இப்படித்தான்னு சால்ஜாப்பை ஏத்துக்க மாட்டேன். சச்சினும், கங்குலியும், கில்கிரிஸ்டும், டிவில்லியர்சும் ரிட்டையர்மென்ட் அறிவிச்ச கடைசி மேட்ச் வரை அதே மாதிரித்தான அடிச்சிட்டிருந்து இருந்தாங்க. உனக்கு மட்டும் யாரு உள்ள புகுந்து மைண்ட்டை மாத்துனது தல? நீ முன்னல்லாம் தட்டி விட்டாலே சிக்சு போகும். இப்போ ஓங்கி அடிக்கும்போது பேட்டுல இருந்து வர்ற காத்து அம்பையரையே அசைக்குது. பந்து என்னவோ சிங்கிளுக்குத்தான் போகுது. “பார்த்து பார்த்து.. பந்துக்கு வலிக்கப்போகுது.. மெல்லமா அடிங்கன்னு” எதிரணிக்காரங்க எள்ளி நகையாடுறத கேட்க முடியல.

கொஞ்ச நாளாவே எனக்கு ஒரு சந்தேகம். கடைசி ஓவர்ல சிக்ஸ் அடிச்சா வின் பண்ணிரலாம்னு உன் ஆழ் மனசுக்குள்ள புகுந்து யாரோ அசால்ட் பண்ணிட்டாங்களா? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்..? கடைசி ஓவர்ல சிக்ஸ் அடிச்சி பேரு வாங்குன ஆளுதான் நீ.. ஆனா கடைசி ஓவர்ல மட்டும் சிக்ஸ் அடிச்சா, பேரு கெட்டு போயிரும் பார்த்துக்க.

நேத்து அத்தனை பால்லயும் மொக்க போட்டுட்டு, கடைசி ஓவர்ல மட்டும் கிரவுண்ட தாண்டி அடிச்சி என்ன பண்ண? கோவில் வாசல்ல உருளாம நீ ஏன் தல குழாயடில உருண்டுட்டு கிடந்த? “முந்துன ஓவர் ஆர்ச்சர் போட்டதால அடிக்கல.., சின்னப் பையன் கிடைச்சதும் சிதைச்சிவிட்டு பேரு வாங்க பார்த்தாப்லன்னு” எதிரணிக்காரன் என் காதுபடவே பேசும்போது, கடுப்பாகுது தல.

நீ அடிக்கலைன்னா கூட பரவாயில்ல.. களத்துக்கே வராம இருக்குறததான் கனவுல கூட நினைச்சி பார்க்க முடியல. ஒன்னு கவனிச்சேன்… நீ களத்துல நின்ன நேரத்த விட, டிவி விளம்பரத்துல வந்த நேரம்தான் அதிகமா இருந்துச்சி. நேற்று வந்த சின்னப் பசங்களையெல்லாம் முன்னாடி இறக்கி விட்டது, பதற்றத்துல ஆட அவுங்களுக்கு பயிற்சி கொடுக்கத்தான்னு.. நான் வேணா மனச தேத்திப்பேன். ஆனா இத, இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது.

என்னவோ நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். இப்படித்தான் ஆடுவேன்னு நீ முடிவெடுத்தாலும் அப்பவும் நான் ஆளை மாத்த மாட்டேன். “எங்க தலைக்கு தில்ல பார்த்தியா.. டி20 மேட்சிலும் டெஸ்ட் மேட்ச் ஆடுற ஒரே ஆளு தோனிதான்னு,” அப்பவும் உனக்குத்தான் நான் முட்டுக் கொடுப்பேன்- இப்படிக்கு முரட்டு தோனி பக்தன்.” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x