நவம்பர் முதல் 16 வகையான காய்கறிகளுக்கு கேரள அரசே விலை நிர்ணயம் செய்யும்!

கேரளாவில் நவம்பர் 1 முதல் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 16 வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விற்பனை விலையை நிர்ணயிப்பது குறித்த விவாதங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன. முதல்வர் பினராயி விஜயன் நவம்பர் 1 முதல் இந்த காய்கறிகளுக்கான குறைந்தபட்ச விலையை அறிவிப்பார் என்று விவசாயத்துறை தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவைவிட 15 முதல் 25 சதவீதம் கூடுதலாக இந்த குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் குறைந்தபட்ச விலையைவிட சந்தைவிலை குறைவாக இருந்தால், இந்த வேறுபாட்டை அரசாங்கம் ஏற்கும். அதேபோல குறைந்தபட்ச விலை ஒவ்வொரு ஆண்டும் மறுநிர்ணயம் செய்யப்படும்.
பழங்கள், காய்கறிகளை சேமித்து பதப்படுத்துவதில் உள்ள சிரமத்தை கணக்கில் கொண்டு இந்த குறைந்தபட்ச விலை தீர்மானிக்கப்படும் என்று விவசாயத்துறை தெரிவித்துள்ளது. வாழைப்பழங்கள், அன்னாசி, மரச்சீனி கிழங்கு, தடியங்காய், வெள்ளரி, பாகற்காய், புடலங்காய், பயறு, தக்காளி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், பூண்டு (காந்தல்லூர்) ஆகிய 16 இனங்களுக்கு இந்த குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படுகிறது.