இந்தியா உட்பட மூன்று நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தடை செய்தது சவுதி அரேபிய அரசு!

இந்தியாவுக்குப் பயணிகள் விமானங்களை இயக்கவும், இந்தியாவிலிருந்து விமானங்கள் வரவும் சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 ஆயிரம் பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர் மற்றும் 45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சவுதி அரேபியப் பயணிகள் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் சவுதி அரேபியாவுக்கு இயக்கவும், சவுதி அரேபியாவிலிருந்து இந்த 3 நாடுகளுக்குப் பயணிகள் விமானத்தை இயக்கவும் தடை செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்கு முன் எந்த பயணியாவது வந்திருந்தால் அவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதேசமயம், அரசின் அழைப்பின் பெயரில், அலுவல்ரீதியாக வருவோருக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தாது. இந்தத் தடை உத்தரவு அனைத்து விமான நிறுவனங்களுக்கும், சவுதி அரேபியாவிலிருந்து இயக்கப்படும் தனியார் விமானங்களுக்கும் பொருந்தும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதியிலிருந்து இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், மே 6-ம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன் மூலம் விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு 24 மணிநேரம் தடை விதித்து துபாய் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. இது தவிர இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 3-ம் தேதிவரை இந்திய விமானத்துக்குத் தடை விதித்து ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.