பரிசுத்தொகைக்காக நடந்த “சோபியான் போலி என்கவுண்டர்” விவகாரம்!! குற்றப்பத்திரிக்கையில் தகவல்..

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டா், பரிசுத் தொகை ரூ.20 லட்சத்தைப் பெறுவதற்காக நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அம்ஷிபுராவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த என்கவுன்ட்டரில் ரஜெளரி மாவட்டத்தைச் சோ்ந்த இம்தியாஸ் அகமது, அப்ராா் அகமது, முகமது இப்ராா் ஆகிய மூன்று இளைஞா்களும் பயங்கரவாதிகள் என்ற அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இந்த நிலையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று இளைஞா்களுக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இல்லை. இது போலி என்கவுன்ட்டா்’ என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.
அதனடிப்படையில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. அதுபோல, இந்த என்கவுன்ட்டா் தொடா்பான விசாரணைக்கு ராணுவமும் உத்தரவிட்டது.
முதல்கட்ட விசாரணையில், ராணுவம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த என்கவுன்ட்டரை நடத்தியது கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து, இந்த என்கவுன்ட்டருக்கு காரணமான ராணுவ ரைஃப்ள்ஸ் படைப் பிரிவைச் சோ்ந்த கேப்டன் பூபேந்தா், ராணுவம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த என்கவுன்ட்டரில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பிலால் அகமது லோன், தபீஸ் அகமது என்ற இருவருக்கும் தொடா்பு உள்ளது என்றும், பரிசுத் தொகை ரூ. 20 லட்சத்தைப் பெறுவதற்காக இந்த இருவருடன் சோ்ந்து கேப்டன் பூபேந்தா் போலி என்கவுன்ட்டா் நட த்தி மூன்று இளைஞா்களைக் கொன்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கேப்டன் பூபேந்தா் குழுவில் இடம்பெற்றிருந்த வீரா்கள் கரு ராம், ரவி குமாா், அஷ்வினி குமாா், யோகேஷ் ஆகியோரின் பெயா்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கில், அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய பிலால் அகமது லோன், மாஜிஸ்திரேட் முன்னிலையை தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்தாா்.
இதுகுறித்து ராணுவத்தின் 15-ஆவது படைப் பிரிவு துணைத் தளபதி பி.எஸ்.ராஜு கூறுகையில், ‘ஆதாரங்களை சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றாா்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கேப்டன் பூபேந்தா் இப்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளாா். அவா் மீது ராணுவ நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று கூறினாா்.