கணவருக்கு இறுதிச் சடங்கு செய்த பெண்.. 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவர்!!

கொரோனாவால் உயிரிழந்தது தனது கணவர்தான் என நினைத்து வேறு ஒருவரது உடலை வாங்கிச்சென்ற பெண் அந்த உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால் 4 நாட்கள் கழித்து அந்த பெண்ணின் கணவர் உயிருடன் வந்து அதிர்ச்சி அளித்தார்.

கொரோனாவால் உயிரிழந்த வேறு ஒரு நபரை தனது கணவர் என நினைத்த பெண் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால், தனது கணவன் சில நாட்கள் கழித்து உயிருடன் வந்ததால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டில் நடைபெற்றுள்ளது.

ஹோண்டுராஸ் நாட்டின் எல் கார்மென் பகுதியை சேர்ந்த தம்பதியர் ஜூலியோ(65) மற்றும் விக்டோரியா. கணவன் மனைவியான இவர்கள் கார்மென் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 25-ம் தேதியில் ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடைபயணத்திற்கு சென்றுள்ளார்.

இவர் தான் வசித்த பகுதியில் அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியான திரினிடேட் என்ற இடத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜூலியோ விழுந்ததால் அவருக்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனால், அவர் அன்று வீட்டிற்கு வரவில்லை.

நடைபயணமாக சென்ற தனது கணவர் வராததால் சந்தேகமடைந்த மனைவி விக்டோரியா போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், கடந்த 30-ம் தேதி எல் கார்மென் பகுதியில் உள்ள மருத்துவமனையில் விக்டோரியாவுக்கு இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் உங்களது கணவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்த நபரை அடையாளம் காண நீங்கள் வர வேண்டும் என விக்டோரியாவுக்கு மருத்துவமனை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வரும்போது கணவரின் அடையாள சான்றிதழை கொண்டு வரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த விக்டோரியா தனது கணவரின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பிணவறையில் இருந்த முதியவர் உடலை மருத்துவ ஊழியர்கள் காண்பித்து இது உங்கள் கணவரா என அடையாளம் காட்டுங்கள் என கேட்டுள்ளனர். அந்த உயிரிழந்த நபரை பார்த்த விக்டோரியா இவர் தனது கணவர் ஜூலியோ தான் என கூறியுள்ளார்.

இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த அந்த நபரின் உடலை விக்டோரியாவிடம் மருத்துவ ஊழியர்கள் ஒப்படைத்தனர். உயிரிழந்தவர் தனது கணவர்தான் என நினைத்துக்கொண்ட விக்டோரியா அந்த உடலை பெற்றுக்கொண்டு தனது சொந்த ஊரில் அடக்கம் செய்தார்.

4 நாட்கள் கழித்து ஜனவரி 3-ம் தேதி ஜூலியோ வீட்டிற்கு முன் கார் ஒன்று தனது வீட்டின் முன் நிற்பதை கவனித்த விக்டோரியா வெளியே வந்தார். அங்கு உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தனது கணவர் ஜூலியோ உயிருடன் இருந்ததை கண்டு விக்டோரியா அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் நடந்த விவகரத்தை மருத்துவ ஊழியர்கள் விக்டோரியாவிடம் தெரிவித்தனர். அந்த தகவலையடுத்து, விக்டோரியா உண்மை நிலையை புரிந்து கொண்டார். மேலும், தனது கணவரை அவர் கண்ணீர் மல்க வரவேற்றார். கணவன் இறந்து விட்டார் என வேறு நபரை அடக்கம் செய்த பின்னர் உண்மையான கணவர் உயிருடன் வந்த சம்பவம் ஹோண்டுராஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x