அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், மூத்த அணு விஞ்ஞானியுமான டாக்டர் சேகர் பாசு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்..

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், மூத்த அணு விஞ்ஞானியுமான டாக்டர் சேகர் பாசுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் மூச்சுதிணறல் காரணமாக கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரசு பள்ளியில் படித்து, பின்னர் பொறியியல் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி சேகர் பாசு. இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்தின், மிகவும் சிக்கலான உலையை உருவாக்கியதில் முன்னோடி ஆவார். 2015 முதல் 2018 வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். இவருக்கு 2014-ல் பத்மஸ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு கவுரவித்துள்ளது.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
மூத்த விஞ்ஞானி பத்மஸ்ரீ டாக்டர் சேகர் பாசுவின் மறைவு தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் அரிஹந்திற்கு மகத்தான பங்களிப்பு செய்தார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.