லட்சகணக்கில் வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள்!
வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும், ரிலையன்ஸ் ஜியோ 45 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 59 லட்சம் வாடிக்கையாளர்களை வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழந்துள்ளன. அதாவது, வோடஃபோன் ஐடியா நிறுவனம் 48.2 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 11.3 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. டிராய் வெளியிட்ட ஜூன் மாதத்தின் வாடிக்கையாளர் விவரங்களில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த செல்லிடப்பேசி பயனாளர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 0.28 சதவீதம் சரிந்து 114 கோடியாகக் குறைந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தவிர்த்து, பிற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே கடந்த ஜூன் மாதத்தில் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஆனால் ஜியோ மட்டுமே 44.9 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.