ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்ற கேரள அரசு!!

தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பை செய்ததற்காக கேரள அரசு ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்றுள்ளது.
தொற்றாத நோய்கள் மற்றும் மன நோய்களை கட்டுப்படுத்துவதில் கேரள சுகாதாரத்துறை சிறந்து விளங்குகிறது. இதனை பாராட்டு வகையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ராய்சஸ் UNIATF விருதை அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 7 சுகாதார அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருதை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் பெற்றுள்ளார். முதன் முறையாக கேரள அரசு பெறும் சர்வதேச விருது இதுவாகும். 2019ம் ஆண்டில் எளிதில் தொற்றாத நோய்களை கேரள அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியதாகவும், உலகம் முழுவதும் நோய் கட்டுப்படுத்தும் சேவையிலும் கேரள அரசு இடம் பிடித்துள்ளதாலும், புற்றுநோய், நுரையீரல் நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கு நல்ல சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாலும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது சுகாதாரத் துறையில் கேரளத்தின் அயராத சேவையை அங்கீகரிப்பதாக சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா டீச்சர் தெரிவித்தார். இது குறித்து பகிர்ந்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா “இந்த விருது எங்களின் ஓய்வற்ற பணிக்கு கிடைத்த பாராட்டு. மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ளது. கரோனா தொற்று பரவும் வேளையில், எளிதில் பரவாத நோய்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தினோம்.” என்றார். மேலும், மாநில சுகாதாரத்துறையின் இச்சாதனைக்கு அனைத்து சுகாதார ஊழியர்களையும் அவர் வாழ்த்தினார்.
முன்னதாக கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தியதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றி இருந்தார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.