பொதுத்தேர்வுக்கு மதிப்பெண்; பெற்றோர் கவலை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. அதற்கு பதில், மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் மதிப்பெண்களையும், வருகைப்பதிவேட்டையும் அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
பொதுத்தேர்வு ரத்துக்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்தாலும், புதிய மதிப்பெண் வழங்கும் முறையால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து எழுந்துள்ளது.
காரணம், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதனால், புத்தகங்கள் அச்சிடும் பணி சற்று தாமதாக தொடங்கியது.
சொல்லப்போனால், பல தனியார் பள்ளிகளுக்கும், அரையாண்டு தேர்வுக்கு பின்னரே புத்தகங்களே கையில் கிடைத்தன. அத்துடன், புதிய பாடத்திட்டம் என்பதால், அதை படிக்கவும், புரிந்துகொள்வதும் சிரமமாக அமைந்தன. இதனால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்களே எடுத்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
“முந்தைய காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கினால், மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் மதிப்பெண் குறையும். எனவே, இதற்கு நல்ல தீர்வை தமிழக அரசுதான் கூற வேண்டும்” என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.